என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெங்கநாதர் கோவில்"
- கடந்த 1-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார்.
- தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.
திருச்சி:
கோவிந்தா. கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் இன்று நடை பெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்க நாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.
இவ்வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கடந்த 1-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார். மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, சித்திரைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 4.30 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காலை 5 மணியளவில் சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இதையடுத்து காலை 5.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழச்சித்திரைவீதியிலிருந்து புறப்பட்டு தேர் தெற்குசித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 10 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.
சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீசார் செய்திருந்தனர். நாளை(7-ந்தேதி) இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்படும். நாளை மறுநாள் (8-ந்தேதி) இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் , இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் திருநாளான 19-ந்தேதி தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தார்.
காலை 5.15 மணிமுதல் காலை 6 மணிவரை ரதரோஹணம் (மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.30 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு உத்திர வீதிகளில் வழியாக காலை 9.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
நாளை (25-ந்தேதி) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 26-ந்தேதி மாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 4 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடை கிறார். வாகன மண்ட பத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்ப ல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.
- அதிகாலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும்.
- நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுநதாண்டகத்துடன் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
முன்னதாக 13-ந்தேதி முதல் பகல்பத்து திருவிழா நடைபெற்றது. பகல் பத்து உற்சவம் 10-வது நாளான இன்றுடன் நிறைவு பெறுகிறது. சொர்க்கவாசல் திறப்புடன் நாளை ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது.
இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் நாளை அதிகாலை 3 மணியளவில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத் திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார். தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.
முன்னதாக விரஜா நதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்ட ருள்வார். அதனைத் தொடர்ந்து காலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலைக் கடந்து மணல்வெளி, நடைப் பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக் கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணிநேரம் பக்தர் களுக்கு சேவை சாதிப்பார்.
அதன்பின் சாதரா மரியாதையாகி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சேருவார்.
வைகுண்ட ஏகாதசிவிழா வின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான மோகினி அலங்காரம் வைபவம் இன்று (22-ந் தேதி) நடந்தது. இதை முன்னிட்டு இன்று காலை உற்சவர் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் அர்ச்சுன மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 5 மணிக்குமேல் நான்காம் பிரகாரம் வலம் வந்து கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார், இரவு 8 மணிக்குமேல் ஆழ்வார், ஆச்சார்யர்கள் மரியாதை யான பின் 9 மணியளவில் மூலஸ்தானம் சேருவார். விழாவிற்கான ஏற்பாடு களை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில், அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள், அலு வலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங் கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் விழா கோலம் பூண்டுள்ளது. ராஜகோபுரம் உள்ளிட்ட, 21 கோபுரங்கள், 7 பிரகாரங்கள் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டு ஜொலிக் கின்றன. மேலும், கோவில் வளாகத்திற்குள் மூலவர் ரங்கநாதர், சங்கு, சக்கரம், நாமம் போன்ற உருவங்களில் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண சுமார் 1 லட்சம் பக்தர்கள் வரு வார்கள் என்று எதிர் பார்க்கபப்டுகிறது. இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணிக்காக திருக்கோவில் ரெங்க விலாஷ் மண்டபம் அருகில் மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது.
- பழுது பார்க்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
- முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கட்டைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றி சிறிய மற்றும் பெரிய கோபுரங்கள் பல உள்ளன. ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியையும், கீழ அடையவளஞ்சான் வீதியையும் இணைக்கும் சாலையில் கிழக்கு நுழைவு வாசலில் சிறிய கோபுரம் உள்ளது.
இந்த கோபுரத்தில் கீழிருந்து ஒன்று மற்றும் இரண்டாவது நிலைகளில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே கோபுரத்திற்கு சேதம் ஏற்பட்டு மேலும் உடைந்து விழாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கட்டைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பழுது பார்க்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ள இடத்திலிருந்து சிறிதளவு செங்கல் கட்டுமானங்கள் நேற்று காலை கீழே விழுந்துள்ளன. இக்கோபுர வாசல் வழியாக தினமும் பொதுமக்கள் கடந்து செல்வதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறுவதற்கு முன் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது பற்றி கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போதைக்கு ஆபத்து ஏதுமில்லை. எனினும் ரூ.67 லட்சம் செலவில் இக்கோபுரத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடக்கிறது.
- இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை நடைபெறும் தேரோட்டத்தின்போது, தேரில் எழுந்தருளுவார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும் தொண்டு செய்து அவருக்கு மனைவியானாள். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் இடையே சம்பந்தமும், உறவும், மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது. எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது.
பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
இதையொட்டி நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் கோவில் ஊழியர் யானை மீது அமர்ந்து பட்டு வஸ்திரங்களை எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கள பொருட்களை கையில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
இன்று காலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கள பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை நடைபெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தின்போது, தேரில் எழுந்தருளுவார்.
- வஸ்திர மரியாதை பொருட்களை நேற்று இரவு திருப்பதிக்கு எடுத்து சென்றனர்.
- நாளை ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்துவிட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஆகும். முன்பு மொகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம், அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி மாதம் 1-ந் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அனைத்தும் கோவிலில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பின்னர் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஒரு தட்டை யானை மீது வைத்தும், மற்ற தட்டுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், கோவில் மணியக்காரர் உடையவர் ஸ்ரீதர், அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வலம் வந்து, மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்னா் வஸ்திர மரியாதை பொருட்களை நேற்று இரவு திருப்பதிக்கு எடுத்து சென்றனர். இவர்கள் ஆடி முதல் தேதியான நாளை(திங்கட்கிழமை) திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்துவிட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள்.
- மங்கள ஆரத்தி நடைபெற்றது.
- திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதியும், ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 7-ந் தேதியும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7.15 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் 11 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு காலை 7.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.
பின்னர் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெற்றது.
இதேபோன்று ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவானைக்காவல் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் நேற்று காலை ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 8 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், 11 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல், சித்திரை வீதிகள், கீழவாசல் வழியாக கோவிலுக்கு காலை 9.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் சிங்கப்பெருமாள் சன்னதியில் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலட்சுமி தாயார், உற்சவர்லட்சுமிநரசிம்மன் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.
பின்னர் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலட்சுமி தாயார், உற்சவர் லட்சுமிநரசிம்மன் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பின்னர் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நடைபெற்றது.
- யானை மீது தங்கக்குடத்தில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
- முதல் தைலக்காப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்றனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் காவிரி ஆற்றில் 1 தங்கக்குடம், 28 வெள்ளிக்குடங்களில் புனிதநீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீரை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும், 28 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனிதநீர் அம்மா மண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு காலை 9.15 மணிக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கு காலை 9.30 மணியளவில் திருமஞ்சனம் நடைபெற்றது. மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்கள் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு, தொண்டைமான் மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர் சிறு பழுதுகள் செப்பனிடப்பட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டு மாலை 4 மணிக்கு ஒப்புவிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. அவரது திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான முதல் தைலக்காப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது.
இதையடுத்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டன. 48 நாட்களுக்கு பிறகு இந்த தைலம் உலர்ந்த பின் தான் பெரிய பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெருமாளின் திருமேனியில் முகத்தை மட்டும் தரிசிக்க முடியும். மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜேஷ்டாபிஷேகத்தின் மறுநாளான இன்று (திங்கட்கிழமை) காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டு, அந்த சாதம் பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை ஆகியவற்றை முன்னிட்டு நேற்று முழுவதும் மற்றும் இன்று மாலை வரை மூலஸ்தான சேவைக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- உற்சவர் ரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
- வசந்த உற்சவ நாட்களில் தாயார் மூலவர் சேவை கிடையாது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் தாயார் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது தாயார் சன்னதியின் பின்புறம் அகழி போல் உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மண்டபத்தின் நடுவில் ரெங்கநாச்சியார் வீற்றிருப்பார்.
இந்த ஆண்டுக்கான தாயார் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி மாலை 6 மணி அளவில் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் ரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
பின்னர் ரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த விழா வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6.30 மணிக்கு சென்றடைவார்.
வசந்த உற்சவ நாட்களில் மாலை 4 மணிமுதல் மாலை 6 மணி வரை தாயார் மூலவர் சேவை கிடையாது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- வசந்த உற்சவம் இன்று தொடங்கி 16-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.
- வசந்த உற்சவ நாட்களில் தாயார் மூலவர் சேவை கிடையாது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் தாயார் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது தாயார் சன்னதியின் பின்புறம், நான்கு புறமும் அகழி போல உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மண்டபத்தின் நடுவில் ரெங்கநாச்சியார் எழுந்தருளுவார்.
இந்த ஆண்டுக்கான தாயார் வசந்த உற்சவம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6.30 மணிக்கு வந்தடைவார்.
வசந்த உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேருவார். அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். உற்சவர் ரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.
பின்னர் ரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். வசந்த உற்சவ நாட்களில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை தாயார் மூலவர் சேவை கிடையாது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- வசந்த மண்டபத்திலிருந்து நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
- மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் தினமும் மாலை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்திற்கு எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி நெல்லளவு கண்டருளினார்.
வசந்த உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு வசந்த மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு இரவு 8.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து நம்பெருமாள் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 28-ந்தேதி தொடங்கியது.
- நம்பெருமாள் அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. வசந்த உற்சவ நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவில் புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
வசந்த உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 2-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு வசந்த மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு இரவு 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். நம்பெருமாள் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்